﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>பொய்யிலி மாலை</book>

<title><line>அருக்கன் பாதம் வணங்குவர்</line></title>

<para>
<text>
"ஆதிபுராணத் திருக்குறுங்தொகை" என்ற பதிகத்தில் அப்பர் பெருமான்
</text>
</para>

<para>
<verse>
<line>அருக்கன்பாதம் வணங்குவார் அந்தியில்</line> 
<line>அருக்கன் ஆவான் அரன் உருவல்லனோ?</line> 
<line>இருக்கு நான்மறை ஈசனையே தொழும்</line> 
<line>கருத்தினை நினையார் கன் மனவரே</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். இதற்கு அருணை வடிவேல் முதலியார் தருமைப்பதிப்பில்  கீழ்வரும் பொழிப்புரைகள் கொடுத்துள்ளார். 
</text>
</para>

<para>
<text>
"அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவார் சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினை கல்மனம் படைத்தவர்களாய் சிலர் நினைக்கமாட்டார்கள்." 
</text>
</para>

<para>
<text>
என்பது முதலியார் அவர்களது உரை.
</text>
</para>

<para>
<text>
யஜுர்வேதத்தில் ருத்ரம் என்றொரு பகுதி உண்டு. இதில்தான் நமசிவாய என்ற சொல் வருகிறது. இப்பகுதியை "சதருத்ரீயம்" என்று அழைப்பர். இதை நீரில் நின்று எப்பொழுதும் தியானித்ததால்தானே ருத்ரபசுபதிநாயனார் என்பவர் சிவமுக்தி பெற்றார்! சிவ வழிபாட்டில் ருத்ரம் மிகச்சிறந்த நிலை வகிக்கும் மந்திரம். அது கூறித்தான் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறோம். இது 11 பகுதிகளைக் [அனுவாகங்கள்] கொண்டது இதில் எட்டாவது பகுதி முக்கியமானது. அதில்தான் "நமசிவாய" என்ற சொல் வருகிறது. இப்பகுதி 
</text>
</para>

<para>
<verse>
<line>நம: ஸோமாயச ருத்ராயச நமஸ் தாம்ராயச அருணாயச</line>
</verse>
</para>

<para>
<text>
என்று தொடங்குகிறது. உமாதேவியோடு கூடிய பரனுக்கு வணக்கம். ருத்ரனுக்கு  வணக்கம் என சிவபெருமானின் பல உருவங்களைக் கூறி அவற்றினுக்கு வணக்கம் கூறுவதாக அமைகிறது ருத்ரத்தின் இப்பகுதி. 
</text>
</para>

<para>
<text>
இதில் "நமஸ் தாம்ராய ச அருணாய ச" என்பதைக் காண்போம். இதற்கு பட்டபாஸ்கரர் என்பவர் எழுதிய பண்டைய உரை உண்டு. அதில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
</text>
</para>

<para>
<verse>
<line>அத: ஆதித்ய ரூபேண சர்வேஷாம் அபி அநாயாசேன</line> 
<line>ப்ரத்யக்ஷீபூய ஸகல :ஸ்ரேயஸ் ப்ரதத்வாத் அபி பரமேச்வர ஏவ உபாஸ்ய இதி</line>
</verse>
</para>

<para>
<text>
இதன் தமிழ்க் கருத்து. ஆதித்யனாகிய சூரியன் உருவத்தில் எல்லோருக்கும் மிகவும் சுலபமாக நேராகத் தோன்றி எல்லா நன்மைகளையும் அளிக்கும் பரமேஸ்வரனே. அவரே வழிபடத் தகுந்தவர் என்பதாம்.
</text>
</para>

<para>
<verse>
<line>நமஸ் தாம்ராயச இதி உதயகாலே அத்யந்த ரக்தவர்ண: தாம்ர:</line>
<line>ததநந்தரம் ஈஷத் ரக்த அருண:</line> 
<line>ச காராதூர்த்வம் பப்ரு வர்ண:</line>
<line>ஏவம் பூதாய அஷ்ட மூர்த்தே: பகவத: சூர்யாத்மகோ</line>
<line>மூர்த்தி விசேஷ: தஸ்மை நம இத்யாத்த:</line>
</verse>
</para>

<para>
<text>
விடியற்காலையில் மிகவும் சிவந்த வண்ணமாகத் தோன்றுவதை தாம்ரம் என்கிறோம். இதற்குப் பிறகு மஞ்சள் குளித்த சிவப்பு வர்ணம் ரக்தம் எனப்படுகிறது. இவ்வுருவில் தோன்றுபவர் பகவானுடைய எட்டு மூர்த்திகளில் ஒன்றான சூரியன் என்னும் உருவமாகும். அதற்கு வணக்கம் என்பது பொருள் என்று அவ்வுரை கூறுகிறது. 
</text>
</para>

<para>
<text>
மேலும் அவ்வுரையின் தமிழாக்கம் "உலகில் பலகாலம் பல நியமங்களைப் பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். அதன் பிறகுதான் தெய்வம் தோன்றுகிறது. ஆனால் ஆதித்தனோ நாம் எவ்வித முற்சியும் செய்யாவிடினும் தாமாகவே எல்லா உயிர்களின் முன்பும் நல்ல சிவந்த வர்ணத்திலும், மஞ்சள் சிவப்பு வர்ணத்திலும் தோன்றுகிறான். அருள் கொடுக்கிறான். இவ்வாறு தாமாகவே தோன்றி அருள் பாலிக்கும் ஆதித்தன் பரமேச்வரன் தான் என்ற அறிவு மக்களுக்கு ஏற்படும்போது பெரும் மேன்மையை அடைகின்ற இந்த ஆதித்தனே பிரம்மன் ஆகின்றான்".
</text>
</para>

<para>
<verse>
<line>இத்தம்  ஸ்வயம் ஏவ ஆவிர்ப்பூய</line>
<line>வரதானாபிமுகே அவஸ்திதே பரமேஸ்வரோயம்</line>
<line>இதி புத்திமாத்ரம் விதந்வன் அகிலம்</line> 
<line>அபி ஸ்ரேயோ லபதே: ததா ச</line>
<line>ஸ்ருதி: உத்யந்தம் அஸ்தம் யாந்தம்</line> 
<line>ஆதித்யம் அபித்யாயன் குர்வன் பிராம்மனோ</line>
<line>வித்வான் சகலம் பத்ரம் அஸ்நுதே</line>
<line>அஸௌ ஆதித்யோ பிரும்மேதி</line>
<line>அத: அநாயாசேந ஏவ அகில புருஷார்த்த பிரத:</line>
<line>பரமேஸ்வர ஏவ உபாஸ்ய இதி</line>
</verse>
</para>

<para>
<text>
இதனால் பரமேச்வரனே வழிபடப்படுகிறான் என்று இந்தக் கருத்தையே வேதம் கூறுகிறது. "பிரும்மன்" என்றால் பரம்பொருள் என்று பொருள். அசௌள = இந்த, ஆதித்தன் = சூரியன், பிரும்ம = பரமனே, என்பது வேதம். ஆதலின் "தாம்ராய ச அருணாய ச" என்பதற்கு அந்தியில் தோன்றும் சூரியன் என்று பொருள். அவனை வணங்குகிறேன். அவன் யார்? உமாதேவியுடன் கூடிய ருத்ரனே என்பது இந்த ருத்ரத்தின் கருத்து. ஆதலின் யஜுர்வேதத்தில் உள்ள சூரியன் சிவபெருமானே என்று கூறுகிறது. 
</text>
</para>

<para>
<text>
இதைத்தான் அப்பர் அந்தியில் வணங்கப்படும் அருக்கன் ஆகிய சூரியன் அரனே என "அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன் உருவல்லனோ எனப்பாடுகிறார்". மேலும் இருக்கு முதலிய வேதங்களே ஈசனைத்தான் தொழுகின்றன. நான்கு வேதங்களின் சாரம் ருத்ரம். அது ஆதித்தன் வடிவில் உள்ள ஈசனைப் போற்றுகிறது. நான்மறை என்றால் வேதம். இருக்கு நான்மறை என்றால் ருக்கு வேதம். அது ஈசனையே தொழும். கருத்தினை நினையார். கன்மனவரே என்றால், கல் மனத்தவர் என்று பொருள். கல் மனத்தவர் வழிபாட்டின் உண்மைக் கருத்தை அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். சூரியன் என்பது சிவபெருமானே என அப்பர் பாடுவது வேதத்தின் கருத்து எனத் தெளிவு. அதைதான் அப்பர் குறித்துள்ளார். அது தான் அருக்கன் பாதம் வணங்குவர் என்னும் பாடலின் சிறப்பு. 
</text>
</para>

<para>
<text>
சிவபெருமானுக்கு அஷ்டமூர்த்தி எனப்பெயர். ஐந்து பூதங்களும் சந்திரன், சூரியன், இயமானன் என்ற மூன்றும் சேர்ந்து எட்டு உருவில் உள்ளதையே அஷ்டமூர்த்தி என்பர். இதனை தேவாரத்தில் பல இடங்களில் காண்கிறோம். சம்பந்தர் 
</text>
</para>

<para>
<text>
"பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் பணிமதி ஆகாசம் ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்" என்று பாடுகிறார். சிவபெருமானே இரவி என்பது பொருள். 
</text>
</para>

<para>
<text>
சைவர்கள் சூரியனை சிவசூரியன் என்று வணங்குவர். சிவசூரியனுக்கு பீடபூசை உண்டு. ஆதலின் அப்பர் கூறும் "அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ" என்பது பெரும் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
</text>
</para>

</article>
